"பேசிப்போன வார்த்தைகள் எல்லாம்
காலந்தோறும் காதினில் கேட்கும்
சாம்பல் கரையும் வார்த்தை கரையுமா...'

நமக்கெல்லாம் எப்படியோ தெரிய வில்லை, ஆனால் நா.முத்துக்குமார் எழுதிப் போன வார்த்தைகள் எதுவுமே கரையவில்லை என்பதன் அடையாளமாக நேரு உள்விளை யாட்டு அரங்கில் ஒலித்தன அவரின் பாடல் வரிகளும், அதை கேட்டு சிலிர்த்த ரசிகர்களின் குரலும். தமிழ்த்திரை வரலாற்றில் ஒரு பாடலாசிரியர் மறைந்து இத்தனை ஆண்டுகள் கழித்து அவருக்காக இத்தனை பிரம்மாண்ட மான ஒரு நினைவஞ்சலி இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது இதுவே முதல்முறை. ஒரு பாடலாசிரியருக்காக இத்தனை ஆயிரம் ரசிகர்கள் குவிந்ததும் இதுவே முதல்முறை.

Advertisment

கடந்த 2016ஆம் ஆண்டு மறைந்த நா.முத்துக்குமார், சீமான் இயக்கிய "வீரநடை' படம் மூலம் 2000ஆம் ஆண்டில் தமிழ் சினிமாவில் பாடலாசிரியராக அறிமுகமாகி சில ஆண்டுகளிலேயே பிஸியான பாடலாசிரியராகிவிட்டார். தன் எளிமையான, இயல்பான, உணர்வுப்பூர்வமான வரிகளாலும், தனது நட்பான சுபாவத்தாலும் இவர் மறையும்வரை முன்னணியில் இருந்தார். கடந்த ஜூலை 12 இவரது 50ஆவது பிறந்த நாள். ஜூலை 19ல் நடைபெற்ற இந்நிகழ்வை முன்னெடுத்ததில் இயக்குனர் ஏ.எல்.விஜய் முக்கியமானவர். இயக்குனர் கள் ஆர்.கே.செல்வமணி, ஆர்.வி.உதயகுமார், மோகன் ராஜா, வசந்தபாலன், ராம், தயாரிப்பாளர்கள் தனஞ்செயன், சுரேஷ்காமாட்சி, எழுத்தாளர்கள் பவா செல்லதுரை,  அஜயன் பாலா, வேல்முருகன் ஆகி யோர் நிகழ்ச்சி ஏற்பாடுகளைச் செய்தனர். இயக்குனர்கள் பாலா, லிங்குசாமி, ராஜேஷ், கல்வியாளர் எஸ்.கே.பி.கருணா ஆகியோரும் நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுவில் அங்கம் வகித்து பங்காற்றினர். அழைப்பிதழ் வடிவமைப்பில் தொடங்கி பாடல்கள் தேர்வு வரை பார்த்துப் பார்த்து செய்திருந்தனர்.      

சிறப்பு விருந்தினர்களாக நடிகர் சிவக்குமார், சத்யராஜ், கலைப்புலி தாணு, நக்கீரன் ஆசிரியர், சீமான், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். நா.முத்துக்குமாரின் உதவியாள ராக பல ஆண்டுகள் உடனிருந்த பாடலாசிரியர் வேல்முருகன் எழுத்தில் உருவான ஆவணப்படம், நமக்குத் தெரிந்த முத்துக்குமாரின் தெரியாத பின்புலத்தை சில நிமிடங்களில் நமக்கு அறிமுகம் செய்தது. யுவன்சங்கர் ராஜா, ஜி.வி.பிரகாஷ், விஜய்ஆண்டனி, ஸ்ரீகாந்த் தேவா, நிவாஸ் கே.பிரசன்னா உள்ளிட்டவர்கள் தங்கள் இசையில் நா.முத்துக்குமார் எழுதிய பாடல்களை பாடி ரசிகர்களை மகிழ்வித்தனர். ஜி.வி.பிரகாஷ் -சைந்தவி இருவரையும், தான் எழுதிய டூயட் பாடலின் மூலம் ஒரே மேடையில் இணைத்து வைத்தார் முத்துக்குமார். அவர்கள் இருவரும் இணைந்து பாடும்போது ரசிகர்கள் உற்சாகக் குரலெழுப்பி மகிழ்ந்தனர். "மதராசபட்டினம்' படத்தின் "பூக்கள் பூக்கும் தருணம்' பாடலில் வரும் ஆங்கில வரிகளுக்காக ஆண்ட்ரியா என்ட்ரி கொடுக்க அரங்கம் அதிர்ந்தது. தன் நண்பர் முத்துக்குமாருக்காக நடிகர் சித்தார்த் ஒரு பாடலைப் பாடினார்.

மேடையில் ஸ்ரீகாந்த் தேவா பாடிக்கொண்டிருந்த போது, அவரது தந்தை இசையமைப்பாளர் தேவா அரங்கில் நுழைய, ரசிகர்கள் பெரும் ஆரவாரம் செய்தனர். "முத்துக்குமார் ஆரம்பத்தில் என்னிடம் வாய்ப்பு கேட்டு வருவார். இயக்குனர்களிடம் அவரை அறிமுகம் செய்தால் எல்லோருமே சின்னப் பையனாக இருக்கிறார் என்று சொல்லி மறுப்பார்கள். தம்பி நீ தாடி வச்சுட்டு வாப்பா என்று சொன்னேன்'' என்று நா.முத்துக் குமாரின் அடையாளமான தாடியின் கதையை சொல்லி, முதல் வாய்ப்பை இயக்குனர் சீமான் தந்ததையும் குறிப்பிட்டார் தேவா. சீமான், "தம்பி முத்துக்குமார் மிகச்சிறப்பாக பாடல் எழுதுபவன். அவனை அறிமுகம் செய்யும் வாய்ப்பை அவன்தான் எனக்கு அளித்தான்'' என்றார்.

Advertisment

ஆஈபஈ ஈவண்ட்ஸ் நிறுவனம் நடத்திய இந்நிகழ்ச்சியின் வருவாயைக் கொண்டு நா.முத்துக் குமார் குடும்பத்தினருக்கு வீடு ஒன்று அன்பளிப் பாக வழங்கப்பட்டது. சிவக்குமார், சூரியா, கார்த்தி மூவரும் இணைந்து முத்துக்குமார் குடும்பத்துக்கு பத்துலட்ச ரூபாய் அன்பளிப்பாய் தருவதாக அறிவித்து வழங்கினார் நடிகர் சிவக்குமார். வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தரும் தயாரிப்பாளருமான ஐசரி கணேஷ், "முத்துக்குமாரின் மகன், மகள் இருவரும் என்ன படிப்பை விரும்பினாலும் தங்கள் நிறுவனத்தில் எந்த கட்டணமுமின்றி பயிலலாம்' என்று அறிவித்தார். சிவகார்த்திகேயன், “"என் கல்லூரி நாட்களில் யுவன் -நா.முத்துக்குமார் பாடல்கள் என்னில் மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்கியவை. நான் எழுதுன பாடல்களில் பெரிய அர்த்தமில்லை. ஆனால் அதை அர்த்தமுள்ளதாக்க, பாடல்களுக்கான சம்பள தொகையை கேட்டு வாங்கி எனது இன்ஸ்பிரேசனான நா.முத்துகுமார் அவர்களது குடும்பத்தினருக்கு கொடுத்தேன்'' என்றார்.

இயக்குநர் பாலா, “"தமிழ்நாட்டில் ஒரு பெரிய கட்சியில் அப்பாவுக்கும், மகனுக்கும் இடையே அரசியல் பனிப்போர் நடக்கிறது. அப்போது அந்த அரசியல் தலைவர் மகனைப் பற்றி பேசும்போது நா.முத்துக்குமார் பெயரையும் சொல்லி "தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தையின் அன்பின் முன்னே' என்று பாடல் வரிகளை குறிப்பிட்டு பேசினார்'' என்று டாக்டர் ராமதாஸ் பெயரை குறிப்பிடாமல் முத்துக்குமாரின் வரிகள் எந்தளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தி யிருக்கின்றன என்பதை குறிப்பிட்டார். கலைப்புலி தாணு, "பல்லேலக்கா' பாடலில் வந்த இரட்டைக்கி ளவியையும், அடுக்கு தொடரையும் கேட்ட கவிஞர் வாலி, நா.முத்துகுமாரைப் பாராட்டி தன்னிடம் பேசியதைப் பகிர்ந்தார்.

இப்படி பாடலாசிரியரின் புகழைப் பாடி நெகிழ்ந்தது தமிழ்த் திரையுலகம். "அவள் அப்படியொன்றும் அழகில்லை', "ஆனந்த யாழை மீட்டுகிறாள்', "போகாதே...' என நா.முத்துக்குமாரின் வரிகளில் உணர்வுக் குளத்தில் நெகிழ்ந்து நீந்திய ரசிகர்கள், "ஒரு நாளில் வாழ்க்கை இங்கே' பாடலை யுவன் பாடியபோது நெகிழ்வின் உச்சம் தொட்டு, தங்கள் செல்போன்களின் டார்ச்சால் ஒரு ஒளி அஞ்சலியையே அரங்கேற்றினர். "செல்வராகவன் வரலையே' என்ற சிறு ஏமாற்றமும் இருந்தது.

நா.முத்துக்குமாரின் மனைவி ஜீவலட்சுமி, மகன் ஆதவன் நாகராஜன், மகள் மகாலட்சுமி உள்ளிட்ட குடும்பத்தினரும் நண்பர்களும் இந்த அன்பை பார்த்து நெகிழ்ந்துபோயினர். ஆதவன், தந்தையை போலவே தமிழிலும் எழுத்திலும் ஆர்வம்கொண்டவர். "ஆற்றில் செல்லும் நீரில் நேற்றின் வெள்ளம் ஏது... நேற்றெல்லாம் மாயையே...' என்பது "பாபநாசம்' படத்துக்கான நா.முத்துக்குமாரின் வரி. ஆனால், அப்படி ஒரு கடந்த கால மாயையாக அவரை கருதமுடியாது என்பதைச் சொல்லி நா.முத்துக்குமாரின் நண்பர் களும் திரையுலகமும் ரசிகர்களும் சேர, சரியான தொரு இசையஞ்சலி அன்று அரங்கேறியது.    

-வசந்த் பாலகிருஷ்ணன் 
தாஸ் 

namuthukumar1